புதுடெல்லி: முன்னாள் துணைப் பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு (97 வயது), உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பெற்றுவந்த அத்வானியின் உடல்நிலையில் தற்போது சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மருத்துவர்கள் அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அவர், விரைவில் சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுவார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1927ஆம் ஆண்டு கராச்சி (இப்போதைய பாகிஸ்தான்) நகரில் பிறந்த அத்வானி, 1942ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், நீண்டகாலமாக அக்கட்சியின் தேசியத் தலைவராகப் பதவி வகித்த பெருமைக்குரியவர்.
1999-2004 ஆண்டுகளில் திரு அடல் பிகாரி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது திரு அத்வானி உள்துறை அமைச்சராகவும் பின்னர் துணைப் பிரதமராகவும் பதவி வகித்தார்.
இவ்வாண்டு மார்ச் மாதம் அத்வானிக்கு இந்தியாவின் ஆக உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

