தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

2 mins read
14a5c801-bfe1-4c4e-bf7a-9da7ad7480f7
இருநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்போது, அமெரிக்காவுக்குள் ஏற்பட்டு வரும் சட்டவிரோத குடிநுழைவுகளுக்கு எதிராக முயற்சி எடுத்ததற்காக இந்தியாவுக்கு நன்றி கூறப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: வர்த்தக வரிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தளர்வு குறித்து இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வர்த்தக அதிகாரிகள் புதுடெல்லியில் கலந்துரையாடியுள்ளனர்.

இருநாட்டு வர்த்த ஒப்பந்தத்தை அடைவதற்கான முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் சனிக்கிழமையன்று (மார்ச் 29) கூறியுள்ளனர்.

இந்திய வர்த்தக அமைச்சையும் அமெரிக்க வர்த்தகக் குழுவையும் சேர்ந்த அதிகாரிகள், இது குறித்த பேச்சு வார்த்தைகளில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்தனர்.

வர்த்தக இடையூறுகளைக் குறைத்து நியாயமான, சமச்சீரான உறவை அடைவது பற்றி அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் கிறிஸ்டஃபர் லாண்டோ, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் பேசியிருந்ததாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் ஏற்பட்டு வரும் சட்டவிரோத குடிநுழைவுகளுக்கு எதிராக முயற்சி எடுத்ததற்காக இந்தியாவுக்கு நன்றி கூறிய லாண்டோ, இந்தியா தம் நாட்டுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பதிலடி வர்த்தக வரிகளைப் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதிக்கத் தயாராகிக்கொண்டிருக்கையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வர்த்தக வரிகளிலிருந்து விலக்குப் பெற விரும்பும் இந்தியா, தனக்கான அணுக்கமான தீர்வைப் பேச்சுவார்த்தைகளின்வழி அடைய முனைகிறது. இரு நாடுகளுமே வரும் மூன்றாம் காலாண்டுக்குள் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதியில் கையெழுத்திட முற்படுகின்றன.

“இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வளமை, பாதுகாப்பு, புத்தாக்கம் ஆகியவற்றை மேம்படுத்த இருநாட்டு வர்த்தக, முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்தும் முயற்சிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கலந்துரையாடல்களின் வெற்றிகரமான முடிவு இதைப் பிரதிபலிக்கிறது,” என்று இந்தியாவின் வர்த்தக அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் வாஷிங்டனுக்குச் சென்றபோது அமெரிக்க எரிசக்தித் தயாரிப்புகளையும் தற்காப்புச் சாதனங்களையும் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய இந்தியத் தரப்பு உறுதி கூறியுள்ளது.

இந்தியாவை வர்த்தக வரி விதிப்பதில் மன்னன் எனத் திரு டிரம்ப வர்ணித்திருக்கிறார். அமெரிக்காவின் விவசாயப் பொருள்கள், மதுபானங்கள், வாகனங்கள் எனப் பல்வேறு பொருள்கள் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா குறைக்கவேண்டும் என்பது அவரது விருப்பம்.

குறிப்புச் சொற்கள்