புதுடெல்லி: மேற்கு நாடுகளில் இந்தியா குறித்த தவறான பார்வை உள்ளது என்றும் அதை மாற்றுவதற்கு இந்தியா தெளிவாகவும் நேர்மையாகவும் அவர்களுடன் உறவாடும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குப் பதில் அளித்தபோது, அண்டை நாடுகளை அரவணைத்து அவர்களுடன் வளர்வதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்று அவர் குறிப்பிட்டார்.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பங்ளாதேஷ் ஆகியவற்றுடன் உறவும் நட்பும் பேணுவதாக அவர் கூறினார்.
அண்டை நாடுகள் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும்போது இந்தியாவில் இருந்துதான் முதலில் உதவிக்கரம் நீள்வதாகக் குறிப்பிட்ட அவர், அந்த உதவிகளைச் சம்பந்தப்பட்ட நாடுகள் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இந்த அடிப்படையில்தான் ஓர் அண்டை நாட்டுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குடிநீரைப் பகிர்ந்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“அந்தப் பதிலுக்கு அந்த நாடு நம்முடன் பயங்கரவாதத்தைப் பகிர்ந்து வந்தது. நல்ல எண்ணம், விரோத எண்ணத்துடன் சமரசம் செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும், பிறர் செய்ய முடியாது.
“இந்திய மக்களைப் பாதுகாக்கவும் அமைதிக்காகவும் எதைச் செய்ய வேண்டுமோ அதை இந்திய அரசு கண்டிப்பாகச் செய்யும். இதுவே நம் நிலைப்பாடு,” என்றார் ஜெய்சங்கர்.
அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கடப்பிதழை சீனா அபகரித்ததைச் சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், இதுபோன்ற அவமானங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அருணாச்சலப் பிரதேசம் இந்திய மாநிலங்களில் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுப் பரவலின்போது தங்கள் நாட்டின் மக்கள்தொகையைவிட இரண்டு மூன்று மடங்கு தடுப்பு மருந்துகளை வைத்திருந்த வளர்ந்த நாடுகள்கூட, மற்ற நாடுகளுக்கு உதவாதபோது மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா, பல நாடுகளுக்கு இலவசமாகவே மருந்து அனுப்பி உதவியதாக ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.

