சென்னை: மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டு மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். எனவே, அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி 8ஆம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், மாநில உரிமைகளை நிலைநாட்ட தமிழ்நாடு எடுத்து வரும் முயற்சிகளை நிதிநிலை அறிக்கை முற்றாக நிராகரித்து, புறக்கணித்துள்ளது. அரசியல் காரணங்களை மனதில் கொண்டு தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ் நாடு அரசின் புதிய ரயில் திட்டங்கள், இரட்டை வழி ரயில் பாதை அமைப்பு, ரயில் பாதை மின்மயமாக்கல், மெட்ரோ ரயில் விரிவாக்கம், மதுரை கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மேலும், கடந்த மூன்றாண்டுகளாக தமிழ் நாடு இயற்கைச் சீற்றங்களால் தாக்கப்பட்டது. அவற்றால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய தேசிய பேரிடர் நிதி கேட்டு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. அதுகுறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நூறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நிறைவேற்ற தமிழ் நாடு அரசுக்கு ரூ.4.50 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இருந்தும், மத்திய அரசு இந்தத் திட்டத்திற்காக வெறும் ரூ.86 ஆயிரம் கோடியை மட்டுமே அறிவித்துள்ளது.
சென்ற ஆண்டு ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு வாரி வழங்கியது போல், இந்த ஆண்டு பீகாருக்குக் கூடுதல் நிதியும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்படி அனைத்து வழிகளிலும் தமிழ் நாட்டைப் புறக்கணித்து வருகிறது மத்திய பாஜக அரசு. எனவே, தமிழகத்திற்குப் பயனளிக்காத இந்த நிதிநிலை அறிக்கையைப் புறக்கணிப்பதைத் தெரிவிக்க நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்புப் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.