புதுடெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி நடத்திவரும் போராட்டம் ஓயாது என்று இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் ‘இண்டியா’ கூட்டணிக் தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்றது. அதில் திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மக்களின் அடிப்படை உரிமைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு பறித்து வருவதாகச் சாடினார்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது நடப்பது பலமுனைப் போராட்டம் அல்ல என்றும் ஒற்றை இலக்கை நோக்கிய போராட்டம் என்றும் தெளிவுபடுத்தினார்.
மத்திய அரசின் திட்டங்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமல்படுத்தி வருவதாக விமர்சித்த திரு ராகுல் காந்தி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க முயற்சிக்கும் யாரும் நீதியின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என எச்சரித்தார்.
இரண்டு ஆண்டுகள் ஆனாலும் தங்களது போராட்டம் தொடரும் என்றார் அவர்.
ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தை நோக்கிய பேரணி, அதிபரிடம் மனு அளித்தல், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் எனத் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சிகள், வரும் நாள்களிலும் தடையை மீறி போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன.
