புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ‘இண்டியா’ கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடத்திவரும் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், நகரின் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் மேலும் 23,000 மத்திய ஆயுதக் காவல்படை வீரர்கள் அவசரமாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் தீவிரப் போராட்டங்களின் பின்னணியில், மத்திய உள்துறை அமைச்சு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் பணியில் இருந்த ஏறக்குறைய 221 படைப்பிரிவுகள் தலைநகருக்கு அழைக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 8 முதல் 12ஆம் தேதி வரை புதுடெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லியின் எல்லைப் பகுதிகளிலும் தீவிர வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜந்தர் மந்தர், முக்கியமான மத்திய அரசு அலுவலகப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபரைச் சந்திக்கும் எதிர்க்கட்சியினர்
இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, இண்டியா கூட்டணிக் கட்சிகள் தங்களின் போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
தேர்தல் நடைமுறைகள் குறித்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான புகார்கள் குறித்தும் வலியுறுத்த, அதிபர் திரெளபதி முர்முவைச் சந்திக்க இண்டியா கூட்டணி சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு அதிபரைச் சந்தித்து மனு அளிக்கத் தயாராகி வருகிறது.
ஞானேஷ் குமாருக்கு கூடுதல் பாதுகாப்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இந்திய உள்துறை அமைச்சு ‘இசட் பிளஸ்’ (Z Plus) உயர்மட்டப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில்கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
புதிய பாதுகாப்பு வளையத்தின்படி, மத்திய ஆயுதக் காவல்படையினர், டெல்லி காவல்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 55 ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
மேலும், புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்திலும், தேர்தல் ஆணையத் தலைமையகத்திலும், அவரது பயணங்களின்போதும் கூடுதல் ஆயுதப்படையினர் சுழற்சி முறையில் பணியில் இருப்பர்.
