தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோல்கத்தாவில் போராட்டம்: பணியில் 4,100 காவல்துறையினர்

2 mins read
553058d0-527c-4974-8ca9-a645536650fc
கோல்கத்தா மட்டுமின்றி நாடு முழுவதுமே போராட்டம் தொடர்ந்து வருகிறது. - கோப்புப் படம்: பிடிஐ

கோல்கத்தா: கோல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தில் மாணவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோல்கத்தாவில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தற்போது வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

மேலும், கோல்கத்தா மட்டுமின்றி நாடு முழுவதுமே போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாணவர்கள் சங்கம் மாபெரும் பேரணியில் ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 4,100 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் பேரணி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நபண்ணா பகுதியை அடைவதால், அங்கு மட்டும் 2,100 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ள நிலையில், பாஜகவும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில் பாஜக மகளிர் அணி, ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் பல போராட்டங்களை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, நாபண்ணா அருகே போராட்டம் நடத்த இதுவரை எந்த அமைப்பும் விண்ணப்பிக்கவில்லை.

இது ஒரு தடைசெய்யப்பட்ட மண்டலம். யாரேனும் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால், அவர்கள் முதலில் காவல்துறையின் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கோல்கத்தா கூடுதல் டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு), எம்.கே.வர்மா தெரிவித்துள்ளார்.

“சில தீயவர்கள் அங்கு (நபண்ணாவிற்கு அருகில்) அமைதியின்மை நிலையை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று எங்களிடம் குறிப்பிட்ட உள்ளீடுகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை என்.டி.ஏ., மூலம் தேர்வு நடத்தப்படுகிறது என்றால், விண்ணப்பதாரர்களோ அல்லது பொதுமக்களோ சிரமப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்,” என்றும் திரு வர்மா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்