ஈரான் அரசுக்கு ஆதரவாக லடாக்கில் ஆர்ப்பாட்டம்

1 mins read
172875a0-f649-429d-ad27-e14b5bb22a83
ஈரான் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியா, ஈரான் ஆகிய இரு நாட்டின் தேசியக் கொடியையும் ஊர்வலமாக எடுத்துச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: ‘எக்ஸ்’ தளம்

லடாக்: ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து லடாக்கில் மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (ஜனவரி 14) நடைபெற்றது.

அதில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஆகியோரின் உருவபொம்மை வைக்கப்பட்ட சவப்பெட்டியுடன் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அந்நாட்டின் பொருளியல் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதயிறுதியில் இருந்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அந்நாட்டு அரசு களமிறக்கியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என்று அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் ஜனவரி 14ஆம் தேதி நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் ஒன்றுகூடி, ஈரான் அரசுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தினர்.

மேலும், ஈரான் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியா, ஈரான் ஆகிய இரு நாட்டின் தேசியக் கொடியையும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுத் தலைவர்களுக்கு எதிரான போராட்டத்தால் லடாக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்