நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சம்பாஜி நகரில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன.
ஏறக்குறைய 60 முதல் 65 கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏறத்தாழ 25 மோட்டார்சைக்கிள்களும் மூன்று கார்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
மேலும், நகரத்தின் மஹால் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட பெரும் மோதலைத் தொடர்ந்து நாக்பூரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை தற்போது சத்ரபதி சம்பாஜிநகர் என்று அழைக்கப்படும் ஔரங்காபாத்தில் உள்ளது.
இந்தக் கல்லறையை அகற்றப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் அறிவித்ததைத் தொடர்ந்து அதற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், நாக்பூர் காவல் ஆணையர் டாக்டர் ரவீந்தர் குமார் சிங்கால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மகாராஷ்டிராவில் இருந்து ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள ஆதரவாளர்கள் நாக்பூரின் மஹால் பகுதியில் உள்ள சிவாஜி மகாராஜின் சிலை அருகே கூடினர். அவர்கள் ஔரங்கசீப்பின் புகைப்படத்தை எரித்து, எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, கோட்வாலி, கணேஷ்பேத்,தேசில், லகட்கஞ்ச், பச்பாலி, சாந்திநகர், சக்கர்தாரா, நந்தன்வான், இமாம்வாடா, யசோதரநகர், கபில்நகர் உள்ளிட்ட காவல்நிலையப் பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 80 முதல் 100 பேர் வரை வன்முறையில் ஈடுபட்டனர். காவலர்கள்மீது கற்கள் வீசப்பட்டன, பல வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. இதையடுத்து, லேசான தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் காவல் துறையினர் வீசினர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரும் நாக்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான நிதின் கட்காரி, சில வதந்திகள் காரணமாக நாக்பூரில் மத பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தவறு செய்தவர்கள் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள்மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளிக்கிறேன். இந்த நிலைமை குறித்து முதலமைச்சருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் வதந்திகளைப் பொருட்படுத்த வேண்டாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, நாக்பூரின் மஹால் பகுதியில் கல் வீசும் சம்பவங்கள், அதிகரித்து வரும் பதற்றங்களைத் தொடர்ந்து காவல்துறை நிலைமையைக் கையாண்டு வருவதாக மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் குடிமக்களை மாநில நிர்வாகத்துடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்,” என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாக்பூர் காவல் ஆணையர் டாக்டர் ரவீந்தர் குமார் சிங்கால் கூறுகையில், “நகரத்தில் தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. ஒரு புகைப்படம் எரிக்கப்பட்ட பிறகு அமைதியின்மை தொடங்கியது. கல்வீச்சு சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்றார்.
“நாங்கள் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளோம், மேலும் அனைவரும் தேவையில்லாமல் வெளியே வரவோ அல்லது சட்டத்தை கையில் எடுக்கவோ வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
நாக்பூரில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, அமைதிக்கு முன்னுரிமை அளிக்கவும், வதந்திகளைத் தவிர்க்கவும் மகாராஷ்டிரா அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான சந்திரசேகர் பவான்குலே குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளார்.