பெங்களூரு: நகைக் கடைக்குள் புகுந்து, ஐந்து நிமிடங்களில் ரூ.10 கோடி மதிப்பிலான ஏழு கிலோ தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக கொள்ளைக் கும்பலுக்கு வலை வீசப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகே உள்ள ஹூன்சூர் பகுதியில் உள்ள ஸ்கை கோல்டு என்ற நகைக் கடையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.03 மணிக்கு ஐவர் கும்பல் ஒன்று அந்தக் கடைக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி கடையில் உள்ள ஊழியர்களை மிரட்டியது. கடையில் நுழைந்ததும் வேகவேகமாக இயங்கிய கொள்ளைக் கும்பல், 300 வினாடிகளில் பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைச் சுருட்டி தப்பிச் சென்றது.
இதையடுத்து நகைக்கடையின் மேலாளர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். கொள்ளையர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளைச் சம்பவத்தின்போது கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. அதில் கொள்ளையர்கள் ஐந்து பேரும் ஒருவர் பின் ஒருவராக கடைக்குள் நுழைவது, பின்னர் துப்பாக்கியைக்காட்டி ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் மிரட்டுவது உள்ளிட்ட காட்சிகள் காணப்பட்டன.
மேலும், கடையில் இருந்த நகைகளை எடுத்து பைகளில் போடும் காட்சிகளும் காணப்பட்டன. கொள்ளையர்களில் மூன்று பேர் தங்கள் முகத்தை மறைக்க தலைக்கவசம் அணிந்திருந்தனர்.
அச்சமயம் கடை மேலாளர் அஸ்கர் அங்கு இல்லை. மதிய உணவருந்தச் சென்ற அவருக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்துள்ளார். ஆனால் அவர் கடைக்கதவை திறக்க முயன்றபோது கொள்ளையர்களிர் ஒருவர் துப்பாக்கியால் கதவை நோக்கி சுட்டுள்ளார்.
இதையடுத்து 2.08 மணிக்கு வெளியே வந்த கொள்ளையர்கள், தயாராக இருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றனர். இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

