தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆறு மாதங்களில் 30,000 பேரிடம் ரூ.1,500 கோடி மோசடி

2 mins read
99e713c0-d0b1-43f6-a3b3-41e8e0f0a7c9
‘ஐ4சி’ எனப்படும் இந்திய ‘சைபர்’ குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.  - சித்திரிப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில், 30,000க்கும் மேற்பட்டோர் மோசடி முதலீட்டு திட்டங்களில் பணத்தை செலுத்தி தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்திய குடிமக்கள் 1,500 கோடி ரூபாய் இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையக் குற்றப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஐ4சி’ எனப்படும், இந்திய ‘சைபர்’ குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இது நாடு முழுதும் இணையம் வழி நடக்கும் குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக மத்திய-மாநிலக் காவல்துறையினரை ஒருங்கிணைக்கிறது.

மேலும், இணையக் குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை ஒரே தளத்தில் பகிர்ந்துகொள்வதற்கான வசதியும் ஏற்படுத்துகிறது. இந்தக் கட்டமைப்பின் உதவியோடு மக்களிடையே இத்தகைய குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரமும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் நாட்டின் முக்கியமான நகரங்களில் பல்வேறு முதலீட்டு மோசடிகள் நடந்துள்ளன. மொத்த மோசடி வழக்குகளில், 65% பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் நடந்துள்ளதாக மத்திய இணையக்குற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலும் எந்தெந்த வயதினர், எத்தகைய மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பன போன்ற புள்ளி விவரங்களும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், 30 முதல் 60 வயதுக்குட்பட்ட நடுத்தர வர்க்கத்தினர் என்றும் இவர்களிடம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றி உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் ஏமாந்துபோன 30,000 பேரில் 2,829 பேர் மூத்த குடிமக்களாவர். பெங்களூரில் மட்டும் 390 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்