திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த இருவர், பூக்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் என்ற போர்வையில், முறைகேடாக ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மின்னிலக்க நாணய மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் ரூ.330 கோடி அளவுக்குப் பணப் பரிவர்த்தனையும் நடந்துள்ளது. இந்திய வருமான வரி புலனாய்வுப் பிரிவினர் இந்த மோசடியைக் கண்டுபிடித்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இது தொடர்பாக மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிரடிச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது வருமான வரித்துறை.
மூன்று நாள்களாக இந்தச் சோதனை நீடித்தது என்றும் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம், இந்தோனீசியாவுக்குப் பூக்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் இந்தோனீசியாவில் இருந்து வழக்கமான, பாரம்பரிய வங்கி முறைகளைப் பின்பற்றாமல், மின்னிலக்க நாணய முறையில் தொகையைப் பெற்றதாகத் தெரிகிறது.
எவ்வாறு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக தெரிந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பல பெயர்களில் ‘கிரிப்டோகரன்சி’ கணக்குகள் தொடங்கப்பட்டன.
கைதான இருவரில் ஒருவர் மட்டும் மலப்புரம், கோழிக்கோடு செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறார். மற்றொருவர் சவூதி அரேபியாவில் உள்ளார்.
மின்னிலக்க நாணய முறையில், ரூ.330 கோடி அளவுக்கு ஹவாலா பணமும் கைமாற்றப்பட்டுள்ளது. தீவிர ஆய்வு, விசாரணைக்குப் பிறகே மோசடி செய்யப்பட்ட ஒட்டுமொத்த தொகை குறித்து தெரியவரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, இந்த முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியுள்ளதால் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் விசாரணை நடைபெற உள்ளது.
263 பேர் கைது; 382 வழக்குகள் பதிவு
இதனிடையே, கேரள காவல்துறை இணைய, நிதி சார்ந்த குற்றங்கள் ‘சை-ஹன்ட்’ என்ற பெயரில் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக 263 பேர் கைது செய்யப்பட்டு, 125 பேர் கண்காணிப்பில் உள்ளனர். ‘சை-ஹன்ட்’ நடவடிக்கையில் ஒரு பகுதியாக 382 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாள்களாக நீடித்த ‘சை-ஹன்ட்’ நடவடிக்கையின்போது காசோலைகள், ஏடிஎம்கள் மூலம் மோசடியாக பணம் பெறுவது, கமிஷனுக்காக தனது வங்கிக்கணக்கை வாடகைக்கு விடுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
காசோலைகளைப் பயன்படுத்தி பணம் எடுத்த 2,683 பேரையும் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுத்த 361 பேரையும் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்ட 665 பேரையும் இதுவரை அடையாளம் கண்டிருப்பதாக ஏடிஜிபி ஸ்ரீஜித் தெரிவித்தார்.


