36 ஆண்டுகளுக்குப்பின் முடிவிற்கு வந்த ரூ.500 லஞ்ச வழக்கு

36 ஆண்டுகளுக்குப்பின் முடிவிற்கு வந்த ரூ.500 லஞ்ச வழக்கு

மாதிரிப்படம்: பிக்சாபே

16 Mar 2026 - 2:48 pm

2 mins read

புதுடெல்லி: இந்திய அரசு அதிகாரி ஒருவர் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அவ்வழக்கானது விசாரணை நீதிமன்றத்தில் 16 ஆண்டுகளும், உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளும், உச்ச நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளும் நீடித்தது.

கலால் (excise) துறையில் பணியாற்றிய அந்த அதிகாரி, கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 500 ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனையடுத்து, 2006 மார்ச்சில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஈராண்டுச் சிறைத்தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

அதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2012ஆம் ஏப்ரல் மாதம் தண்டனையை உறுதிசெய்தது.

அதனைத் தொடர்ந்து, தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

அங்குக் கடந்த 14 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அவரது மனு, 21 முறை வெவ்வேறு அமர்வுகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இறுதியில், நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், பி.பி. வராலே அடங்கிய அமர்வு, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தியது.

ஆயினும், குற்றவாளிக்குத் தற்போது 75 வயதாகிவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட ஈராண்டுச் சிறைத்தண்டனை ஓராண்டாகக் குறைக்கப்பட்டது.

தமக்கு 40 வயதாக இருந்தபோது குற்றமிழைக்கு அந்த அதிகாரி, தற்போது முதியவராகிவிட்டதால் மனிதநேய அடிப்படையில் அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் அமர்வு தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்