5 மாநிலங்களில் ரூ.650 கோடி பறிமுதல்: மேற்கு வங்கம் முதலிடம்

5 மாநிலங்களில் ரூ.650 கோடி பறிமுதல்: மேற்கு வங்கம் முதலிடம்

2 mins read
தேர்தல் பறக்கும் படை அதிரடி
5f034496-2edd-4adf-84ee-932bf8bc3e88
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பறிமுதல் செய்யப்பட்ட தொகையில் பாதிக்கும் மேலான தொகை, அதாவது ரூ.391 கோடி மேற்கு வங்கத்தில் சிக்கியுள்ளது. - படம்: எம்எஸ்என்.காம்

கோல்கத்தா: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகள் அமலில் உள்ளன.

இதை அணுக்கமாகக் கண்காணித்து வரும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், இதுவரை மொத்தம் ரூ.650 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணம், மதுபானம், போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநில வாரியான பறிமுதல் விவரம்

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பறிமுதல் செய்யப்பட்ட தொகையில் பாதிக்கும் மேல் மேற்கு வங்கத்தில் சிக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ரூ.391 கோடி (முதலிடம்), தமிழ்நாட்டில் ரூ.170 கோடி, அசாமில் ரூ.97 கோடி, கேரளாவில் ரூ.58 கோடி, புதுச்சேரியில் ரூ.7 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணம், மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவும், புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

புகார்கள் பெறப்பட்ட 100 நிமிடங்களுக்குள் தீர்வு நடவடிக்கையை உறுதிசெய்ய 5,173க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் களத்தில் உள்ளன.

முக்கிய இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகளை அமைத்துக் கண்காணிக்க 5,200க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் வரும் 23, 29ஆம் தேதிகளில் இரு கட்டங்களாகவும், தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாகவும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்