பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் 7,000 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது உறுதியானதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அச்செய்தி குறித்து கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கத்தின் இயக்குநர் பத்மா பசவந்தப்பா அறிக்கைமூலம் விளக்கம் அளித்துள்ளார்.
“அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. கர்நாடகாவில் 2004ஆம் ஆண்டிலிருந்து 18 முதல் 35 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 7,000 பேருக்கு எச்ஐவி தொற்று இருக்கிறது. இதனைத் திரித்து, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகச் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.
“எங்களிடம் இருக்கும் புள்ளி விவரங்களில் மாணவர்கள், இளம்பெண்கள், இல்லத்தரசிகள் என்பது போன்ற வகைப்பாடு எதுவும் இல்லை. இந்த நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்லூரிகளில் எச்ஐவி பரிசோதனை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சை முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது,” என்று பத்மா கூறினார்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின்படி, நாட்டில் எச்ஐவி தொற்று பாதிப்புள்ள அதிகமானோர் வாழும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் கிட்டத்தட்ட 2.60 லட்சம் பேர் எச்ஐவி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

