மாநில அந்தஸ்து கோரிக்கை புறக்கணிப்பால் புதுவை பாஜக கூட்டணியில் சிக்கல்

மாநில அந்தஸ்து கோரிக்கை புறக்கணிப்பால் புதுவை பாஜக கூட்டணியில் சிக்கல்

2 mins read
024f2dae-0200-40fb-9184-de68aa81eead
2021 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே தே.ஜ. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இணைந்தது. - படம்: தினத்தந்தி

காரைக்கால்: புதுவையில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் என்ஆர் காங்கிரஸ் இம்முறை கூட்டணிக்கு நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று என்ஆர் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட நிறைவடைந்திருக்கும் நிலையில், புதுவையில் கூட்டணி இறுதி செய்யப்படாமல் உள்ளது.

புதுவையில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்து வருகின்றது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்தே என்.ஆர். காங்கிரஸ் தே.ஜ. கூட்டணியில் இணைந்தது.

ஆனாலும் நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி செய்தபோதிலும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகின்றது.

இதுவரை புதுவை அரசு சாா்பில் 13 முறை தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநில அந்தஸ்து கோரி மீண்டும் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை (மார்ச் 12) மாலை கூடிய என்ஆர் காங்கிரஸ் உயர்நிலைக்குழு பின்னிரவு 2.30 மணி வரை ஆலோசனை நடத்தியது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை பாஜகவுடன் தொடங்க வேண்டும் என்று அக்கட்சி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்