புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் மூவர் பதவியேற்பு

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் மூவர் பதவியேற்பு

2 mins read
7cd0c85f-3113-41a4-8fc5-b389a8949e20
புதுவையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அம்மாநிலத்தின் முதல்வர் என். ரங்கசாமி. - படம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோப்புப்படம்
Google News Preferred Icon

புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் ஜூன் மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய அதிபர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் மூவர் அமைச்சரவையில் சேர்க்கப்படவுள்ளனர்.

புதுவை முதல்வர் ந. ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில், ஏஐஎன்ஆர்சி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான பி. ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜிஎன்எஸ் ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

இந்திய நேரப்படி ஜூன் மாதம் 17ஆம் தேதி காலை 9.45 மணிக்கு நடைபெறும் விழாவில், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் இவர்களுக்குப் பதவியேற்புப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சர்களில் ராஜவேலு இதற்கு முன்பு துணை சபாநாயகராகவும் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். சிவக்கொழுந்து, காங்கிரஸ் தலைமையிலான நாராயணசாமி ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர்.

காரைக்கால் தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ராஜசேகரன், முதன்முறையாக அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார். இந்தத் தேர்வின் மூலம் பட்டியல் இன சமூகத்துக்கும் காரைக்கால் பகுதிக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 இடங்களில் 18 இடங்களை வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. கடந்த மே மாதம் 13ஆம் தேதியன்று முதல்வராக ரங்கசாமியும் அமைச்சர்களாகப் பாஜகவின் ஏ. நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸின் மல்லாடி கிருஷ்ண ராவ் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். எனினும், இவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்