புதுச்சேரி: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளையருக்கு மரண தண்டனை

புதுச்சேரி: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளையருக்கு மரண தண்டனை

2 mins read
ea77ce1f-5371-41ff-9384-191332c16b3f
புதுச்சேரியில் 9 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 22 வயது கருணாஸ் முனுசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்தியன் எக்ஸ்பிரெஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்த ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முத்தியால்பேட்டையின் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 22 வயது கருணாஸ் முனுசாமி, 56 வயது விவேகானந்தன் ஆகிய இருவரும் 2024ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 22 வயது கருணாஸ் முனுசாமி (இடது), 56 வயது விவேகானந்தன். 
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 22 வயது கருணாஸ் முனுசாமி (இடது), 56 வயது விவேகானந்தன்.  - படம்: இந்தியன் எக்ஸ்பிரெஸ்

வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி திடீரென மாயமானதை அடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் அந்தச் சிறுமியின் உடல் கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட சிறுமியின் உடல் வேட்டியில் சுற்றப்பட்டிருந்தது.

அதையடுத்து சிறுமியின் உடல் ஜிப்மரில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது அம்பலமானது.

சிறுமிக்கு நடந்ததைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில் கருணாசும் விவேகானந்தனும் கைதுசெய்யப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி காலாப்பட்டு மத்திய சிறையில் உயிரை மாய்த்துக்கொண்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அதையடுத்து, புதுச்சேரி போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளியான கருணாசுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் வாதாடினர்.

விசாரணை முடிந்த நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி, கருணாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தது, கஞ்சா போன்ற போதைப் பொருளுக்கு அடிமையானது போன்ற வழக்குகள் கருணாஸ்மீது ஏற்கெனவே பதிவாகியிருப்பதை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.

இறுதியில் கருணாசுக்கு மரண தண்டனையுடன் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் போக்சோ வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதன்முறை.

குறிப்புச் சொற்கள்