புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை: என்.ஆர்.காங். பிரமுகர் உட்பட நால்வர் கைது

2 mins read
22a486a0-56cb-493f-bb08-c1d825cd1658
போலி மருந்து தயாரிப்புக்கு உடந்தையாக இருந்த மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். - படம்: தின மலர்

சென்னை: புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போலி மருந்துத் தொழிற்சாலை வழக்கில், ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் உட்பட மேலும் நால்வரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் உரிமம் இன்றி போலி மருந்துத் தொழிற்சாலை நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உரிமையாளர்கள் ராஜா, விவேக் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை வளையத்திற்குள் மேலும் நால்வர் சிக்கியுள்ளனர்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் சிக்கினார். இவர் அந்தப் போலி மருந்துத் தொழிற்சாலையின் பங்குதாரராகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

இவருடன், தொழிற்சாலையின் கணக்காளராகப் பணியாற்றிய முருங்கப்பாக்கம் செல்வராஜ், போலி மருந்துகளுக்கு ‘லேபிள்’ ஒட்டும் பணியில் ஈடுபட்ட பூத்துறை ஆனந்தராஜ், கோட்டக்குப்பம் குமரவேலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாநிலம் தழுவிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த வழக்கை, சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்ற துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போலி மருந்துகள், மருந்து ஒவ்வாமை குறித்துப் பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்க, அனைத்து மருந்துக் கடைகளிலும் கியூஆர் குறியீட்டை ஒட்ட வேண்டும் எனத் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மருந்தகங்களில் ஒட்டப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டை வருடுவதன் மூலம், போலி மருந்துகள் குறித்தோ அல்லது மருந்து உட்கொண்ட பின் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தோ பொதுமக்கள் நேரடியாகப் புகார் அளிக்கலாம்.

அண்மையில் தமிழகம், புதுச்சேரியில் போலி மருந்து விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் தயாரான ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்தால் மத்தியப் பிரதேசத்தில் பல குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவங்களைத் தொடர்ந்து, போலி மருந்து விற்பனையைத் தடுக்கவும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் இந்தப் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்