தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நினைவாற்றல் போட்டியில் புதுச்சேரி மாணவருக்கு உலக வெற்றியாளர் பட்டம்

2 mins read
நீருக்கும் நினைவிற்கும் தொடர்புண்டு என்கிறார்!
bc99b852-eaa4-49c2-9bff-793923e65a36
தம் வீட்டில் பல ‘நினைவு மாளிகைகள்’ உள்ளன என்கிறார் விஷ்வா ராஜ்குமார். - படம்: லிங்க்டுஇன் / விஷ்வா

புதுச்சேரி: இணையம் வழியாக நடத்தப்பட்ட உலக அளவிலான நினைவாற்றல் போட்டியில் விஷ்வா ராஜ்குமார் என்ற 20 வயது இந்திய மாணவர் வெற்றியாளர் பட்டம் வென்றுள்ளார்.

எண்பது எண்களின் வரிசையைச் சரியாக நினைவுபடுத்திச் சொல்வது உள்ளிட்ட சவால்களை உள்ளடக்கியது இப்போட்டி.

புதுச்சேரியிலுள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் விஷ்வா பயின்றுவருவதாக அவரது லிங்க்டுஇன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷ்வா 13.50 நொடிகளில் 80 எண்களையும் 8.40 நொடிகளில் 30 படங்களையும் நினைவுபடுத்திச் சொன்னதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

நினைவாற்றலுக்கும் நீர்ச்சத்துக்கும் முக்கியத் தொடர்பு உள்ளது என்பது விஷ்வாவின் கருத்து.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது மூளைக்கு உதவுவதாக நியூயார்க் டைம்சிடம் அவர் கூறினார்.

“வழக்கமாக, ஒருவர் ஒன்றை நினைவுபடுத்திக்கொள்ள முயலும்போது அதனைச் சத்தமாகச் சொல்லமாட்டார். அது, தொண்டை தெளிவாக இருக்க உதவுகிறது. நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனை நீங்கள் உரக்கப் படிக்க மாட்டீர்கள். ஆனால், மனத்தின் குரலாலேயே அதனை வாசிப்பீர்கள்,” என்கிறார் விஷ்வா.

நிறைய நீர் அருந்தாவிடில் வேகம் சற்றுக் குறையலாம் என்றும் அவர் சொன்னார்.

வீட்டில் தமது அறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறை ஆகியவையே தமது ‘நினைவு மாளிகைகள்’ என்றும் அங்குதான் மனனப் பயிற்சி மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இரு சொற்களை எடுத்துக்கொண்டு, அவற்றை மையமாக வைத்து ஒரு கதையை உருவாக்கி, பின்னர் அதனை ஓர் இடத்துடன் தொடர்புபடுத்துவது இவரது பயிற்சி உத்தி.

அடுத்ததாக, வேறு இரு சொற்களைக் கொண்டு, இன்னொரு கதையைக் கட்டமைத்து, அதனை மற்றோர் இடத்துடன் பொருத்திப் பார்ப்பார்.

விஷ்வாவைப் பொறுத்தவரை, இத்தகைய ‘நினைவு மாளிகை’ உத்தியானது, வரிசையாக நினைவில் வைத்திருக்க அவருக்கு உதவுகிறது.

நினைவாற்றல் போட்டிகளில் விஷ்வா தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர் என்பதை அவரது லிங்க்டுஇன் பக்கம் காட்டுகிறது.

‘மெமரி லீக்’ என்ற உலக நினைவுத்திறன் வெற்றியாளர் தொடர் போட்டியில் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட விஷ்வா, “போட்டியாளர்களுக்கு ஒரு திரையில் 80 எண்கள் காட்டப்படும். போட்டியாளர்கள் விரைவாக அவற்றை மனனம் செய்ய வேண்டும். பின்னர் ஒரு பொத்தானை அழுத்தியதும் நினைவுகூர்தலுக்கான தாள் தோன்றும்,” என்றார்.

தாம் கண்ட 80 எண்களையும் விஷ்வா மிகச் சரியாக அதில் எழுதினார்.

“இந்த உலக வெற்றியாளர் போட்டியில் எனது அதிவேக நேரமானது, 13.5 நொடிகளில் 80 எண்களைச் சரியாக நினைவில் வைத்துக்கொண்டதுதான். கிட்டத்தட்ட ஒரு நொடிக்கு ஆறு எண்கள்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்