புதுடெல்லி: புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹம்சா புர்ஹான், பாகிஸ்தான் ஆட்சியின் கீழுள்ள காஷ்மீரில் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முசாஃபராபாத் நகரில் நடந்த அத்தாக்குதலின்போது புர்ஹான் பலமுறை சுடப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அரசு புர்ஹானைத் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவித்தது.
அதன் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “23 வயதான ஹம்சா புர்ஹான் அல்லது டாக்டர் என அழைக்கப்படும் அர்ஜுமந்த் குல்சார் தர், புல்வாமாவின் ரத்னிபோராவிலுள்ள கார்பத்போரா பகுதியைச் சேர்ந்தவர். இவர் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்ட அல் பதர் என்ற பயங்கரவாத அமைப்பின் இணை உறுப்பினர்களில் ஒருவர்,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த அடீல் அகமது தர் என்ற பயங்கரவாதி, லேத்போரா எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தின்மீது வெடிபொருள்கள் நிரம்பிய வாகனத்தை மோதச் செய்தான். அதில் 40 இந்தியப் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

