திருப்பதி: கோவிலுக்குச் செல்லும்போது நகையணிந்து சென்றால் கூட்டத்தில் யாரேனும் திருடி விடுவார்களா எனச் சிலர் அஞ்சக்கூடும்.
ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் 25 கிலோ தங்க நகைகளை அணிந்துகொண்டு இறைவனை வழிபடச் சென்றது பலரையும் வாய்பிளக்க வைத்தது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த அவர்கள், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) அவ்வளவு நகைகளை அணிந்துகொண்டு திருப்பதி ஏழுமலையானை வழிபடச் சென்றனர்.
புனேயின் ‘தங்க ஆண்கள்’ என அழைக்கப்படும் சன்னி நானாசாகேப் வாக்சோரே, சஞ்சய் குஜார், வாக்சோரேயின் மனைவி பிரீத்தி சோனி ஆகியோரே தங்களது செல்வச் செழிப்பை அவ்வகையில் வெளிப்படுத்தினர்.
அவர்கள் இறைவனை வழிபட்டுவிட்டு வெளியில் வந்ததும் பக்தர்கள் பலரும் அவர்களுடன் தம்படம் எடுக்க முண்டியடித்தனர்.
அக்குடும்பத்தினரின் 15 பாதுகாவலர்களும் திருப்பதி கோவில் பாதுகாவலர்களும் புடைசூழ அவர்கள் கோவிலுக்குச் சென்ற காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
விளம்பரப்பட அழகியானபிரீத்தி சோனி, பல்வேறு தொடர்நாடகங்களில் நடித்துள்ளார்.
வாக்சோரேயும் குஜாரும் கட்டுமானத் தொழில் செய்துவருகின்றனர். வாக்சோரே பொழுதுபோக்குத் துறையிலும் கால்பதித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களிடம் தங்கக் காலணிகள், தங்கக் கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த கார்கள் ஆகியவையும் உள்ளன.
“வெள்ளிக்கிழமை கோவிலுக்குச் சென்றோம். அக்காணொளி பரவலாகி வருகிறது. திருப்பதி கோவிலுக்கு நான் சென்றது இது இரண்டாவது முறை. நகைகள் அணிவது எனக்குப் பிடிக்கும். சிறுவயதிலிருந்தே அவற்றை அணிந்து வருகிறேன். அது எனக்கு விருப்பமான செயலாகிவிட்டது,” என்றார் குஜார்.