போராட்டம் செய்த மாணவர்களைத் தண்டிப்பதால் தீர்வு கிடைத்துவிடாது: மோடி

போராட்டம் செய்த மாணவர்களைத் தண்டிப்பதால் தீர்வு கிடைத்துவிடாது: மோடி

படம்: ராய்ட்டர்ஸ்

02 Aug 2026 - 12:48 pm

2 mins read

மும்பை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் நடைபெற்ற போராட்டங்களின்போது தமக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மாணவர்களைத் தண்டிப்பதும் நீதிமன்றங்களுக்குத் திரும்பத் திரும்ப அலையவைப்பதும் நிலைமைக்குத் தீர்வுகாண உதவாது என்றார் அவர்.

மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் மிகப்பெரிய அரசியல் நெருக்கடி ஜூலை மாதம் உச்சத்தை எட்டியது. தேசிய அளவிலான தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால் இரண்டு மில்லியன் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது இளையர்க்குப் போதிய வாய்ப்புகள் இல்லாதது குறித்த கோபத்தை மேலும் தூண்டியது.

போராட்டக்காரர்கள் சிலர் பாதுகாப்புப் படையினருடன் மோதியதோடு பிரதமருக்கு எதிராக அவதூறான முழக்கங்களையும் எழுப்பினர். நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

“இவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட குழந்தைகள். இவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவது நமது கடமை. இவர்களைத் தண்டிப்பதோ நீதிமன்றங்களுக்கு அலையவைப்பதோ சமூகத்தில் துன்புறுத்துவதோ நிலைமையை மாற்றிவிடாது,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.

“நான் இவர்களை மன்னிக்க விரும்புகிறேன். எனது இந்த நிலைப்பாட்டை சமூகமும் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

ஜூலை 31ஆம் தேதி இரவு சமூக ஊடகங்களில் இந்தியப் பிரதமர் காணொளியொன்றை வெளியிட்டார்.

ஆர்ப்பாட்டங்களின்போது நாட்டின் பல பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பதற்றம் வெடித்தது. புதுடெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லமுயன்றோரைக் கலைக்கக் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. தடியடியும் நடத்தப்பட்டது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதாக ஏற்கெனவே கூறியிருந்தது.

ஜூலை 25ஆம் தேதி இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, இளையர் ஆர்ப்பாட்டங்களை முடித்துக்கொண்டனர். தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்தல், மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறையில் செய்யப்பட்ட புகார்களைக் கைவிடுதல் உட்பட மாணவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாபிரதமர்நரேந்திர மோடிநீட் தேர்வுமாணவர்