சண்டிகர்: ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை விமர்சித்து, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய ராணுவம் குறித்த அவரது கருத்துகளை ஏற்க இயலாது என பாஜக கூறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாக்கு சேகரிக்கும் பாஜகவினர், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விரிவாகப் பேசி வருகின்றனர்.
இந்தப் பிரசார உத்திக்கு முதல்வர் பகவந்த் மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“சிந்தூர் (குங்குமம்) என்ற வார்த்தையை பாஜகவினர் கேலிக்கூத்தாக்கிவிட்டனர். ஒவ்வொரு வீட்டுக்கும் சிந்தூர் அனுப்புகிறார்கள். அப்படியானால், பிரதமர் மோடியின் பெயரில் அதைப் பயன்படுத்துவீர்களா? இது ‘ஒரே நாடு, ஒரே கணவர்’ திட்டமா?,” என்று பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனால் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது. பஞ்சாப் முதல்வர் தனது வரம்புகளை மீறிவிட்டதாகக் கூறியுள்ள பாஜக, பகவந்த் மான் வெட்கமின்றிப் பேசுவதாகத் தெரிவித்துள்ளது.
பகவந்த் மான் உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் இந்திய ராணுவம் குறித்த கருத்துகள் வெட்கக்கேடானவை, நாட்டுக்கு எதிரானவை என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியுள்ளார்.