புதுடெல்லி: இந்திய ராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் ஆடவர் ஒருவரைப் பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
துணை ராணுவம் குறித்த வேவுத் தகவல்களை அவர் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு அனுப்பியதாக நம்பப்படுகிறது.
‘பிட்டு’ என்று அழைக்கப்படும் பல்ஜித் சிங், சக் தரிவால் கிராமத்தைச் சேர்ந்தவர். தேசிய நெடுஞ்சாலை-44ன் பதன்கோட்-ஜம்மு பகுதியில் பாலத்துக்கு அருகே உள்ள ஒரு கடையில் அவர் உட்புறக் கண்காணிப்பு ஒளிப்படக் கருவியைப் பொருத்தினார். ராணுவ, துணை ராணுவப் படையினரின் நடமாட்டத்தைக் கவனிப்பதற்காகவே அது பொருத்தப்பட்டதாகக் காவல்துறை கருதுகிறது.
பின்னர் கண்காணிப்புக் கருவியிலிருந்து காட்சிகள் பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்டதாகக் காவல்துறையின் மூத்த அதிகாரி தல்ஜிந்தர் சிங் தில்லான் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரியில் சுஜான்பூருக்கு அருகே நெடுஞ்சாலையில் கண்காணிப்புக் கருவியைப் பொருத்தியதை விசாரணையின்போது பல்ஜித் சிங் ஒப்புக்கொண்டார்.
துபாயிலிருந்து முன்பின் தெரியாத ஒருவர், அவருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்ததாகத் தெரிகிறது. செய்த வேலைக்காக அவருக்கு 40,000 ரூபாய் கொடுக்கப்பட்டது.
கண்காணிப்பு ஒளிப்படக் கருவியும் இணைய வைஃபை சாதனமும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
பல்ஜித் சிங்கையும் சேர்த்து நால்வர்மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விக்ரம்ஜித் சிங் என்ற விக்கா, பல்விந்தர் சிங் என்ற விக்கி, தரன்பிரீத் சிங் என்ற தானு ஆகியோரே அந்த மற்ற மூவர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், பல்வேறு குற்றச் செயல்களிலும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. அவர்களைப் பிடிப்பதற்காக அதிரடிச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
மூத்த அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையிலான கட்டமைப்பின் தொடர்புகளையும் வேவுச் சதிக்கு உடந்தையாக நிதியுதவி அளிப்பவர்களையும் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

