சண்டிகர்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், காவலர்களும் மருத்துவ ஊழியர்கள்ளும் உடனடியாக பணிக்குத் திரும்ப இந்தியாவின் பஞ்சாப் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, எல்லைகளில் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் பலப்படுத்தும் விதமாக, துணை ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையோர மாநிலமான பஞ்சாப்பிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், காவலர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அம்மாநிலக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, விமான மருத்துவச் சேவைகள் சங்கம் மற்றும் விமானப் போக்குவரத்து, மேலாண்மை ஆய்வுகள் பயிலகத்தின் மருத்துவ அதிகாரிகள், ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த இடங்களில் பணியமர்த்தினாலும் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.