தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் கடத்தல்; முறியடித்தது பஞ்சாப் காவல்துறை

2 mins read
105 கிலோ ஹெராயின் பறிமுதல்
279fa109-8393-45c5-a91a-db40f3251498
போதைப்பொருள்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலக் காவல்துறை பாகிஸ்தானிலிருந்து பேரளவில் கடத்திவரப்பட்ட போதைப்பொருள்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளது.

நீர்வழிப் பாதையில் பெரிய ரப்பர் குழாய்களைப் பயன்படுத்தி அவை இந்தியாவிற்குக் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

105 கிலோகிராம் ஹெராயின், 31.93 கிலோகிராம் ஈரப்பதமற்ற கஃபைன், 17 கிலோகிராம் ‘டிஎம்ஆர்’ ஆகிய போதைப்பொருள்களுடன் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைத்துப்பாக்கிகளையும் ஒரு நாட்டுத் துப்பாக்கியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக பஞ்சாப் மாநிலக் காவல்துறைத் தலைவர் கௌரவ் யாதவ் அக்டோபர் 27ஆம் தேதி கூறினார்.

கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நவ்ஜோத் சிங், லவ்பிரீத் குமார் எனும் அவ்விருவரும் நவ் புல்லார் என்றழைக்கப்படும் நவ்பிரீத் சிங்கின் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கட்டமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று திரு கௌரவ் யாதவ் கூறினார்.

கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட ஒரு நீர்வழிப் பாதை மூலம் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள்களை கடத்தினர். கண்டெடுக்கப்பட்ட பெரிய ரப்பர் குழாய்கள் அந்தச் சட்டவிரோதச் செயலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன என்றார் அவர்.

இதன் தொடர்பில், அம்ரித்சர் நகரில் உள்ள மாநிலச் சிறப்பு நடவடிக்கைப் பிரிவுக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் திரு யாதவ் சொன்னார்.

இந்தக் கடத்தல் கும்பலுடன் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய பஞ்சாப் மாநிலக் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பஞ்சாப்பில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 553 கிலோமீட்டர் நீள எல்லைப் பகுதியின் பாதுகாப்புக்கு இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆண்டு (2023) அது போதைப்பொருள்களைக் கடத்தப் பயன்பட்ட 107 ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதுடன் 442 கிலோகிராமுக்கு அதிகமான ஹெராயினையும் கைப்பற்றியது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்