சண்டிகர்: பஞ்சாப்பில் 16 பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதியை அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எஃப்பிஐ) கைது செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிருதசரசின் அஜ்னலா தாலுகாவைச் சோ்ந்தவர் 29 வயது ஹா்பிரீத் சிங் (எ) ஹேப்பி பஸ்ஸியா.
பஞ்சாப்பில் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்பிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவரைத் தேடி வந்தது.
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ, பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (பிகேஐ) என்ற காலிஸ்தான் பயங்கரவாத குழு ஆகியவற்றுடன் அவருக்குத் தொடா்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
சண்டிகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கிலும் ஹா்பிரீத் சிங் தேடப்பட்டு வந்தார்.
அவரைக் கண்டுபிடித்துத் தருபவா்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என என்ஐஏ கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சண்டிகா் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா தப்பிச் சென்ற ஹா்பிரீத் சிங்கை எஃப்பிஐ தற்போது கைது செய்துள்ளது.
“அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள ஹா்பிரீத் சிங்குக்கு பஞ்சாப்பில் கையெறி குண்டு வீசி நடத்தப்பட்ட 14 தாக்குதல் உள்பட 16 பயங்கவாத தாக்குதல்களில் தொடா்பு உள்ளது. அவா்மீது மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 33 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேடப்படும் நபராக அவர் அறிவிக்கப்பட்டிருந்தார்,” எனப் பஞ்சாப் மாநில காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “அவருக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் வழக்கில் என்ஐஏ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஹர்பிரீத் சிங் பெயருடன் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதி ஹா்விந்தா் சிங் சாந்து (எ) ரிண்டா உள்பட 4 குற்றவாளிகளின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருள்களை உள்ளூா் நபா்களின் உதவியுடன் எடுத்துச் செல்ல ஹர்பிரீத் சிங் உதவியது விசாரணையில் தெரியவந்தது,” என்றும் அவர்கள் கூறினார்.