கனடாவில் பஞ்சாப் பெண் கொலை: காதலன் கைது

கனடாவில் பஞ்சாப் பெண் கொலை: காதலன் கைது

2 mins read
668fb041-1ef7-45d5-aa7f-7b8e3538d8f7
பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் உள்ள சம்ராலாவைச் சேர்ந்த 23 வயதான தமன்பிரீத் கோர். - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சண்டிகார்: கனடாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இந்தியப் பெண், அவரது உடன்வாழ் ஆண் நண்பரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலை வழக்கில் தொடர்புடைய 22 வயது இளையரைக் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கனடாவின் அல்பெர்ட்டா மாநிலத்தில் உள்ள எட்மண்டன் நகரின் சில்வர்பெர்ரி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூலை 9ஆம் தேதி மாலை, வீடொன்றில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஆபத்தான நிலையில் இருந்த தமன்ப்ரீத் கோர் என்ற பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூலை 12ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜூலை 14ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கையில், தமன்ப்ரீத் கோர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

புலன்விசாரணைக் காரணங்களுக்காக மரணத்திற்கான காரணத்தைக் காவல்துறையினர் தொடக்கத்தில் வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர புலன்விசாரணையின் அடிப்படையில், தமன்ப்ரீத் கோருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த 22 வயது ரிடீஷ் குமார் என்பவரை ஜூலை 22ஆம் தேதி காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர் மீது நீதிமன்றத்தில் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் முற்றிலும் உடன்வாழ் இணையருக்குள் நடந்த குடும்ப வன்முறை தொடர்பான கொலை வழக்கு எனக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இக்கொலைச் சம்பவத்தில் வேறு எவருக்கும் தொடர்பில்லை என்றும், வேறு சந்தேகப் பேர்வழிகளைத் தேடவில்லை என்றும் எட்மண்டன் காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்த தமன்ப்ரீத் கோரின் உடலை இந்தியாவில் உள்ள அவரது சொந்த ஊரான பஞ்சாப்பிற்கு அனுப்பிவைக்க இணையம் வழி நிதி திரட்டும் முயற்சிகளும் முடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் கனடாவில் வாழும் இந்தியச் சமூகத்தினர் இடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கொலைகுற்றச்சாட்டுஜூலை