தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண் மரணம்: அல்லு அர்ஜுன் கைதாகி விடுதலை

2 mins read
b867f0e8-ee77-40a8-abc7-a4fd287d25c3
அல்லு அர்ஜுனை சிக்கட்பள்ளி காவல்துறையினர், காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது.

‘புஷ்பா-2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, 14 நாள் நீதிமன்றக் காவலில் இருக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கி உத்தரவிட்டது. “அல்லு அர்ஜுன் ஒரு நடிகர் என்பதால், அவரது உரிமையைப் பறிக்க முடியாது; ஒரு குடிமகனாக வாழ்வதற்கும் சுதந்திரத்துக்கும் அவருக்கு உரிமை உண்டு,” என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கில் ஏற்கெனவே திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உயிரிழந்த ரேவதியின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்கிய அல்லு அர்ஜுன், அந்தப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘புஷ்பா-2’ படத்தின் சிறப்புக் காட்சி (பிரீமியர் ஷோ), ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது.

படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி, கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனைக் காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏராளமானோர் மயங்கி விழுந்தனர்.

அவர்களில், 35 வயதான ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரேவதியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அனுமதியின்றி சிறப்புக் காட்சி திரையிட்ட சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள் குழு மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

குறிப்புச் சொற்கள்