புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 18) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் பேசினார்.
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்திக்கவிருக்கும் நிலையில் அதிபர் புட்டின், பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார்.
அந்த உரையாடலின்போது, ரஷ்யா - உக்ரேன் போருக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி மறுவுறுதிப்படுத்தினார்.
இதுபற்றி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு மோடி, “தொலைபேசிவழி அழைத்து, அலாஸ்காவில் அதிபர் டிரம்ப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டதற்காக நண்பர் அதிபர் புட்டினுக்கு நன்றி. உக்ரேன் சண்டைக்கு அமைதித் தீர்வு காணப்பட வேண்டுமென இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. வரும் நாள்களில் எங்களுக்கு இடையில் தொடர்ச்சியான பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 15ஆம் தேதி அலாஸ்காவில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் இடையிலான உச்சநிலைச் சந்திப்பு இடம்பெற்றது.

