மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் விரைவில் இந்தியாவிற்குச் செல்லவிருக்கிறார்.
அவரது பயணத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் வியாழக்கிழமை (மார்ச் 27) தெரிவித்தார்.
“தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் திரு நரேந்திர மோடி ரஷ்யா வந்தார். இப்போது எங்கள் முறை,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், அதிபர் புட்டின் எப்போது இந்தியா செல்வார் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
சென்ற 2024ஆம் ஆண்டு ரஷ்யா சென்றிருந்தபோது அதிபர் புட்டினை இந்தியாவிற்கு வருகை தரும்படி திரு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், திரு மோடியின் அழைப்பை அதிபர் புட்டின் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் லாவ்ரோவ் கூறினார்.
‘புதிய இருதரப்பு உறவை நோக்கி ரஷ்யா-இந்தியா’ எனும் கருத்தரங்கில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார். ரஷ்யாவின் அனைத்துலக விவகார மன்றம் அக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரேன்மீது போர் தொடுத்த பிறகு அதிபர் புட்டின் இந்தியா செல்லவிருப்பது இது முதன்முறை. 2030ஆம் ஆண்டிற்குள் ‘புதிய பொருளியல் வழித்தடத்தை’ உருவாக்க முயன்றுவரும் திரு புட்டின், தமது இந்தியப் பயணத்தின்போது அதனை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவும் ரஷ்யாவும் தங்களது இருதரப்பு வணிக மதிப்பை 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$134 பில்லியன்) மேல் உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

