தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்வெளியில் முளைத்த காராமணி: இஸ்ரோ சாதனை

1 mins read
4f8104b4-a2c1-4cb5-b9ba-888f355aa717
விண்வெளியில் நான்கு நாள்களில் காராமணி விதைகளை விளையச் செய்து (உள்படம்) சாதனை படைத்துள்ளது இஸ்ரோ. - படங்கள்: இந்திய ஊடகம்

பெங்களூர்: விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (Indian Space Research Organization, ISRO), அதில் முதற்கட்ட வெற்றியையும் பெற்றுள்ளது.

விண்வெளியில் செடிகள் வளர்ச்சி அடையும் விதம் குறித்து புரிந்து கொள்வதற்கான பரிசோதனை முயற்சியில், நான்கு நாள்களில் காராமணி பயறு விதைகளை முளைக்க வைத்து சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

அண்மையில் பி.எஸ்.எல்.வி-சி60 ‘போயம்-4’ பயணத்தின்போது அனுப்பப்பட்ட தாவரங்கள், விண்வெளியில் குறைந்த புவியீர்ப்பு சக்தி கொண்ட பகுதியில் முளைக்கத் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புவியீர்ப்பு விசை குறைவாக உள்ள சூழல்களில் விதைகளின் முளைப்புத் திறனும் செடிகளின் வளர்ச்சியும் எவ்விதம் மாற்றம் காண்கின்றன என்பது பற்றி அறிந்து கொள்ளும் வகையில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இந்த பரிசோதனை திட்டத்தினை மேற்கொண்டது.

“இந்த ஆய்வுக்காக எட்டு காராமணி விதைகள் அனுப்பப்பட்டுள்ளன. அவை தற்போது முளைவிட்டுள்ளன.

“முளைவிட்ட காராமணியில் விரைவில் இலைகள் வளரும் என எதிர்பார்க்கிறோம். 7 நாள்களுக்குள் விதை முளைவிடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 நாள்களில் முளைத்தன.

“இது விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது,” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்