வங்கி வேலையை விட்டு விலகியவர் ஆடிக் காரில் பால் விநியோகம்

வங்கி வேலையை விட்டு விலகியவர் ஆடிக் காரில் பால் விநியோகம்

2 mins read
bc17486e-9c75-4080-a35d-098cb41cf395
ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடிக் காரில் தனது வாடிக்கையாளர்களுக்கு பால் விநியோகம் செய்யும் ஹரியானாவைச் சேர்ந்த ஆடவர்.  - படம்: என்டிடிவி

புதுடெல்லி: ஹரியானாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், தனது வங்கி வேலையை விட்டு விலகிய பின்னர், ஆடி சொகுசு காரில் பால் விநியோகித்து வருகிறார். இதனால் உள்ளூர் மக்களிடையே பெரும் பிரபலமடைந்து உள்ளார்.

ஃபரிதாபாத்தில் உள்ள மொஹப்பதாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் பதானா.

பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வங்கியில் நல்ல வேலையில் சேர்ந்தார். ஆனால், வர்த்தக உலகம் உயர் ரக பைக்குகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீதான தனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்துவதை திரு பதானா உணர்ந்தார்.

இதையடுத்து வங்கி வேலையை விட்டு விலகினார்.

ஏற்கெனவே, பால் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்த திரு பதானா, வாகனங்கள் மீதான தனது விருப்பத்தைக் குடும்பத்தின் வர்த்தகத்துடன் இணைப்பதற்கான ஒரு வாய்ப்பைக் கண்டறிந்தார்.

இதுகுறித்து இடிவி ஊடகத்திடம் பேசிய அவர், வாகனங்கள் மீதான தனது காதலை வங்கி வேலை தடுப்பதாகக் கூறி வருத்தம் தெரிவித்தார்.

“எனது ஆர்வத்தை ஒரு தொழிலின் பக்கம் மாற்றவும் குடும்பத் தொழிலுடன் அதை நிறைவேற்றவும் முடிவு செய்தேன்,” என்று கூறிய அவர், வங்கி வேலையை விட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடுகளுக்குப் பால் விநியோகிக்கத் தொடங்கினார்.

தனது கனவை நிறைவேற்ற திரு பதானா முதலில் ஒரு ஹார்லி-டேவிட்சன் பைக்கை வாங்கினார். இது அவரது வேலையைச் செய்யும்போது அவரது ஆசையை அனுபவிக்க அனுமதித்தது.

வணிகம் வேகமாக வளரத் தொடங்கியது. மேலும் அவரது விநியோகங்கள் விரிவடைந்தவுடன், அவர் தனது போக்குவரத்து முறையை மேம்படுத்தினார்.

இன்று, அமித் பதானா தனது வாடிக்கையாளர்களுக்கு ஏறக்குறைய ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆடிக் காரில் பால் விநியோகிக்கிறார்.

அவரது தனித்துவமான இக்கதை இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் ‘ஹார்லி வாலா துதியா’ என்று அழைக்கப்படும் திரு பதானா தனது பைக்கில் பால் விநியோகிக்கும் காணொளியைப் பகிர்ந்துள்ளார். அது பலராலும் பகிரப்பட்டது.

அவர் தனது வேலையில் ஆர்வமாக இருப்பதாகவும், தனது வேலை பற்றி வெட்கப்படவில்லை என்றும் கூறினார். “கார் ஓட்டுவது எனது பொழுதுபோக்கு, எனது ஆர்வத்தை என்னால் விட்டுவிட முடியாது. இப்போது நான் எனது ஆர்வத்தை குடும்பத் தொழிலுடன் இணைத்துவிட்டேன், இதன் காரணமாக நான் சம்பாதிக்கிறேன். எனது பொழுதுபோக்கும் நிறைவேறி வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக திரு பதானாவிடம் பால் வாங்கி வரும் வாடிக்கையாளர்கள் கூறுகையில், “கடந்த 13 ஆண்டுகளாக அவர் பால் விநியோகம் செய்வதைப் பார்த்த ஒரு நீண்டகால வாடிக்கையாளர், ஒரே வித்தியாசம் என்னவென்றால் முன்பு அவர் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பைக்கில் பால் டெலிவரி செய்தார், இன்று அவர் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடியில் வருகிறார்” என்றார்.

குறிப்புச் சொற்கள்