வெறிநாய்க்கடி; இந்தியாவின் இலக்கில் இடையூறுகள்

வெறிநாய்க்கடி; இந்தியாவின் இலக்கில் இடையூறுகள்

2 mins read
180bba12-17f9-45c8-a1c5-fe43e835a04c
2030க்குள் வெறிநாய்க்கடித் தொற்றை அகற்றுவது இந்தியாவின் இலக்கு. - படம்: ஓபிஐஏ

புதுடெல்லி: நாய்கள் மூலம் மனிதர்களுக்குத் தொற்றிக்கொள்ளும் ரேபீஸ் எனப்படும் வெறிநாய்க்கடித் தொற்றை அகற்ற முடியும் என்பதை சிலி, பூட்டான் ஆகிய நாடுகள் அண்மையில் எடுத்துக்காட்டியுள்ளன.

எனினும், அதன் தொடர்பில் இந்தியாவின் இலக்குகளுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வரும் 2030ஆம் வெறிநாய்க்கடித் தொற்றை அகற்றுவது இந்தியாவின் நோக்கமாகும்.

நாய்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டம் சீராக இல்லாதது உள்ளிட்டவை சவால்களாக இருந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்களிலிருந்து பரவும் வெறிநாய்க்கடியை அகற்றிய, உலகச் சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற முதல் லத்தீன் அமெரிக்க நாடு என்ற பெருமையை அண்மையில் சிலி பெற்றது. அந்நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாய்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவிய வெறிநாய்க்கடி தொற்று இல்லாமல் இருந்தது.

அதேபோல், உலகச் சுகாதார நிறுவனம் தென்கிழக்காசிய வட்டாரம் என்று வகைப்படுத்தியுள்ள பகுதியில் அந்த அங்கீகாரத்தைப் பெற்ற முதல் நாடாக பூட்டான் உருவெடுத்தது. நாய்களுக்குத் தொடர்ந்து தடுப்பூசி போடுவது, நாய்கள் எண்ணிக்கையைச் சரிவர கவனித்தல் போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக இருநாடுகளும் அந்த அங்கீகாரத்தைப் பெற்றன.

அவை இந்தியாவுக்கு முன்னுதாரணமாக விளங்கலாம் என்று குறிப்பிட்ட உலகச் சுகாதார நிறுவனம், அந்நாடு எடுக்கவேண்டிய பெருமுயற்சியையும் சுட்டியது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 9.1 மில்லியன் விலங்குக்கடிச் சம்பவங்கள் இடம்பெறுவதாக நிறுவனம் கணித்துள்ளது. அவற்றில் முக்கால்பங்குச் சம்பவங்கள் நாய்க்கடிகளாகும்.

வெறிநாய்க்கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5,726 என்று இந்திய மருத்தவ ஆய்வு நிலையம் ஒன்று கணித்துள்ளது. சவால்கள் இருந்தாலும் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் மூலம் 2030க்கான இலக்கை அடைய முடியும் என்று இந்தியச் சுகாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாநாய்சுகாதாரம்மருத்துவம்நாய்க்கடிதடுப்பூசிபூட்டான்