தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவிரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்ப்போம்: இந்தியா, நியூசிலாந்து திட்டவட்டம்

2 mins read
059035b1-898b-4054-a57a-e7a594618a65
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன், டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். - படம்: பிடிஐ

புதுடெல்லி: தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இந்தியாவும் நியூசிலாந்தும் இணைந்து செயல்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கிடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவது என்று இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணமாக இந்தியா வந்துள்ள நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோபர் நெல்சன், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது பாதுகாப்பு, கல்வி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது, பொருளியல் ஒத்துழைப்பு, வட்டார விரிவாக்கம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது உட்பட பல்வேறு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதையடுத்து நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது, நியூசிலாந்தில் இருந்தபடி சில சட்டவிரோத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவது குறித்து பிரதமர் கிறிஸ்டோபரிடம் தாம் கவலை தெரிவித்ததாகக் கூறினார் மோடி.

இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது நியூசிலாந்து அரசு கடும் நவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை தொடர்பான ஒத்துழைப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

“தீவிரவாத அமைப்புகள் மீதும் அவற்றுக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். எனவே, தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படும்,” என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்