வேலை நீக்கம்; அதிகாரி மகள் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்

வேலை நீக்கம்; அதிகாரி மகள் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்

2 mins read
461f7722-2e22-445b-a3dc-71fda016a5b7
கோப்புப் படம். - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

புதுடெல்லி: தென்கிழக்கு டெல்லியின் கைலாஷ் ஹில்ஸ் பகுதியில், மூத்த இந்திய வருவாய்த் துறை அதிகாரியின் 22 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 19 வயது ராகுல் மீனா என்பவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றவாளி ராகுல், அந்த வீட்டில் கடந்த எட்டு மாதங்களாக வேலை செய்து வந்தவன்.

ஒழுங்கீனம் காரணமாக ஒரு மாதத்திற்கு முன்பு அவன் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தான்.

பழைய மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி அதிகாலையிலேயே வீட்டிற்குள் புகுந்த ராகுல், குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த ஐஐடி பட்டதாரியான அந்த இளம்பெண்ணின் அறைக்குள் நுழைந்துள்ளான்.

அங்கிருந்த கைப்பேசி ஒயரைக் கொண்டு பெண்ணின் கழுத்தை நெரித்து, கனமான பொருளால் தாக்கி மயக்கமடையச் செய்துள்ளான்.

பின்னர் அந்த நிலையிலேயே பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியுள்ளான்.

இந்தக் கொடூரச் செயலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ராஜஸ்தானின் அல்வாரிலும் ஒரு பெண்ணை அவன் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எய்ம்ஸ் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மூச்சுத்திணறல் காரணமாகவே இளம்பெண் மரணம் அடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது டெல்லி நீதிமன்றம் குற்றவாளியை நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

டெல்லியின் பாதுகாப்பான குடியிருப்புப் பகுதியில் நடந்துள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்