காசியாபாத்: உத்தரப்பிரதேசத்தின் சம்பல் நகரில் முகலாயர் கால பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்து கோயிலை இடித்துவிட்டு அங்கு பள்ளிவாசல் கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கள ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் நால்வர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர்.
அப்பகுதிக்குள் நுழைய டிசம்பர் 31ஆம் தேதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதியை பார்வையிட ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் டிசம்பர் 4ஆம் தேதி (புதன்கிழமை) காலையில் காஜிபூர் வந்தடைந்தனர். அவர்கள் தொடர்ந்து சம்பலுக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, சாலையில் தடுப்புகள் போடப்பட்டிருந்தன.
இதனையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், தொடர்ந்து செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், இருவரும் புதுடெல்லிக்குத் திரும்பினர்.
“நாங்கள் சம்பலுக்கு செல்ல முயற்சிக்கிறோம். ஆனால், காவல்துறையினர் தடுக்கின்றனர். எங்களை முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக அப்பகுதிக்குச் செல்வது எனது உரிமை,” என ராகுல் காந்தி கூறினார்.
மேலும், “நான் தனியாகச் செல்லத் தயார். மாநில காவல்துறையினரையும் உடன் அழைத்து செல்ல தயார். ஆனால், அந்த கோரிக்கையையும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். சில நாள்கள் கழித்து வருமாறும், அப்போது அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்,”என்றார் ராகுல்.
பாதிக்கப்பட்டோரைச் சந்திக்க எங்களுக்கு உரிமை உண்டு: பிரியங்கா காந்தி
“சம்பலில் என்ன நடந்திருந்தாலும் அது தவறு. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர். அவர் அப்பகுதியைப் பார்வையிட அரசியலமைப்பு உரிமை உள்ளது. அவர் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க உரிமை உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உத்தரப்பிரதேச காவல்துறையினருடன் ராகுல் காந்தி தனியாகச் செல்லவும் தயாராக இருக்கிறார். ஆனால், காவல்துறை அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றுகிறோம் என்று ஏன் இப்படிநடந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை,” என்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது பிரியங்கா கூறினார்.

