தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஆதாரங்களுடன் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்

தேர்தல் ஆணையம் மோசடி செய்வதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

2 mins read
17140f54-134c-44c6-b181-4021f4740480
தலைமைத் தேர்தல் ஆணையத்தின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் நடந்த முறைகேடுகளையும் பட்டியலிட்டார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் நலனுக்கு எதிரான குற்றச்செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

இதன் காரணமாகவே எளிதாக இணையம் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வழங்க மறுக்கிறது என்றார் அவர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், மோடி வெற்றி பெற 25 தொகுதிகள்தான் தேவைப்பட்டன. 25 தொகுதிகளில் 33,000 வாக்குகளைவிட குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வெற்றி பெற்றிருந்தது என்ற அவர் சில தரவுகளை முன்வைத்தார்.

முதன்முறை வாக்காளர்களில் பெரும்பாலானோர் 18 - 20 வயது உடையவர்கள் அல்ல. 80 வயதுடைய ஒருவரும் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“ஒரே முகவரியில் 45 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், ஒரு தொழிற்சாலையில் பல வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“ஒரே தொகுதியில் 12,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்ட முகவரியில் 40,000 பேர் இல்லை.

“சில வாக்காளர்களின் பெயர்கள் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. வீட்டின் எண் பூஜ்ஜியம் என பல வாக்காளர்களின் முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மேலும் ஒரே வாக்காளரின் பெயர், பல்வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளது. பல வாக்காளர்களுக்கு தந்தை, தாய் பெயர்கள் இல்லை.

பல வாக்காளர்களுக்குப் புகைப்படங்கள் பதிவு செய்யப்படவில்லை, அடையாளம் காணும்படி இல்லை,” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

“கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் காங்கிரஸ் குழு, ஒரு லட்சம் போலி வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளது. போலியான முகவரி கொடுத்து வாக்காளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

“மகாதேவபுரா பேரவைத் தேர்தலில், 6.5 லட்சம் வாக்குகளில் 1 லட்சம் வாக்குகள் போலியானவை.

இப்படி ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மோசடியான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்,” என்று கூறி, தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்கும் வகையில் தரவுகளை வெளியிட்டு ராகுல் காந்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்