தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

1 mins read
3a341a64-3446-456c-bb1b-87bed79aed69
‘மோடி’ குடும்பப் பெயர் தொடர்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: குஜராத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

லலித் மோடி, நீரவ் மோடியைக் குறிப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, ஏன் அனைத்து திருடர்களுக்கும் ஒரே குடும்பப்பெயர் உள்ளது என்று கேட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது ராகுல் இவ்வாறு கருத்துரைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்திமீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ராகுலின் கருத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்திவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

இவ்வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு ஈராண்டுச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன் காரணமாக அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

அதனையடுத்து, தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் தாக்கல் செய்த சீராய்வு மனுவை இம்மாதம் 7ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்