லக்னோ: அவதூறு வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் 200 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற யாத்திரையில் கலந்துகொண்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசியபோது, சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக நிருபேந்திரா என்ற வழக்கறிஞர் அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக மார்ச் 5ஆம் தேதி ராகுல் லக்னோ நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக கூடுதல் தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், ராகுல் முன்னிலையாகவில்லை. மாறாக, அவரது சட்டக் குழு அவர் நேரில் முன்னிலையாவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனுதாக்கல் செய்தது.
இதை ஏற்காத நீதிபதி, நேரில் முன்னிலையாகாத ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்தார்.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல்14ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.