தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மையற்றவை: எலான் மஸ்க்

2 mins read
பாஜக முன்னாள் அமைச்சர் பதிலடி; ராகுல் காந்தி ஆதரவு
efe4c6aa-28ce-486d-a925-2a910a40aead
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் ‘எக்ஸ்’ ஊடக உரிமையாளருமான எலான் மஸ்க். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மஸ்க் தம்முடைய ‘எக்ஸ்’ ஊடகப் பக்கத்தில், “இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரத்தை ஆராய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன. அமைப்புகள் பொறுப்பேற்க இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது,” எனப் பதிவிட்டுள்ளார்.

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தவிர்க்க வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் ஊடுருவுவதற்கான ஆபத்துகள் அதிகம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறிய அளவில் முறைகேடு செய்தாலும் அது பெரியதுதான்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரீபியன் தீவு நாடான புவெர்ட்டோ ரிக்கோவில் நடந்த அண்மைய தேர்தல்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறி, அமெரிக்க அரசியல்வாதியான ராபர்ட் எஃப் கென்னடி தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதனைப் பகிர்ந்து, கருத்துரைத்த மஸ்க், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கறுப்புப் பெட்டி,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, அவரது கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

“பாதுகாப்பான மின்னிலக்க வன்பொருளை யாராலும் உருவாக்க முடியாது என்பதைக் குறிக்கும் மிகப் பெரிய பொதுமைப்படுத்தும் அறிக்கை இது. தவறு. இணைப்பு இல்லை, புளூடூத் இல்லை, வைஃபை, இன்டர்நெட் இல்லை. மறுபுரோகிராம் செய்ய முடியாத புரோகிராமில் உள்ளே நுழைய வழியே இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்தியா செய்ததுபோல் கட்டமைத்து உருவாக்க முடியும். ஒரு பயிற்சியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம், எலான்!” என்று திரு ராஜீவ் கூறியுள்ளார்.

இந்நிலையில், மஸ்க்கின் ‘எக்ஸ்’ பதிவைப் பகிர்ந்து, அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

குறிப்புச் சொற்கள்