திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கும் ராகுல் காந்தி, தற்போது அந்தத் தொகுதியின் எம்.பி. பதவியைவிட்டு விலக உள்ளதாகக் கூறப்படுவதை அடுத்து, ராகுலை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனி ராஜா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபோல் பதவியை விட்டு விலகுவது வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி செய்யும் துரோகம் எனவும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வென்றுள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கமான ஒன்றுதான் என்றபோதிலும், இரண்டிலும் வெற்றிபெறுபவர்கள் ஒரு தொகுதியில் மட்டுமே எம்பியாக நீடிக்க முடியும்.
இந்தச் சூழலில், ரேபரேலி - வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றின் எம்.பி. பொறுப்பிலிருந்து அவர் விலகிக்கொள்ள வேண்டும்.
அது வயநாடு தொகுதிதான் என வெளியான தகவல்களை அடுத்து, இதற்கு ஆனி ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இரு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து முன்கூட்டியே வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி தெரிவிக்கவில்லை.
“வென்ற பின்னர் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது, வயநாடு தொகுதி மக்களுக்கு அவர் செய்யும் பெரும் துரோகம்,” என்று சாடியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கேரளத்தின் ஆளும் இடதுசாரிகள் சார்பாக வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ஆனி ராஜா, வயநாடு தொகுதியில் மீண்டும் தான் போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வயநாடு தொகுதியில் 647,445 வாக்குகளுடன் ராகுல் காந்தி வென்றுள்ளார். ஆனி ராஜா 283,023 வாக்குகளுடன் அங்கே வெற்றி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

