புதுடெல்லி: அண்மையில் வெளியான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளில், முறைகேடு நடந்துள்ளதாக பல புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதிய 1,500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே கல்வி மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனிடையே கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், தேர்வு முடிவுகள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளது எனவும் மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழ் நாடும் நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நான் உங்கள் குரலாக ஒலிப்பேன் என ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“நரேந்திர மோடி இன்னும் பதவி ஏற்காத நிலையில், நீட் தேர்வில் நடந்துள்ள மோசடி 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும், அவர்களது குடும்பங்களையும் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது,” என்று ராகுல் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக மாறுவேன் என்றும் உங்கள் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளை வலுவாக எழுப்புவேன் என்றும் உறுதியளிக்கிறேன் என்று ராகுல் கூறியுள்ளார்.
இந்த நாட்டின் இளைஞர்கள் ‘இண்டியா’ கூட்டணி மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் குரல் ஒடுக்கப்படுவதை இண்டியா கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது,” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
நீதிபதியின் அறிக்கை ஒன்பது மொழிகளில் வெளியீடு
தொடர்புடைய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவினை எழுதியுள்ளார்.
அதில், நீட் தேர்வு ஆபத்தை முதன்முதலில் உணர்ந்து பிரசாரம் செய்தது திமுகதான். நீட் பாடத் தொகுப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் திமுக அரசு குழு அமைத்தது.
அக்குழு அளித்த பரிந்துரையின்படி, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை அதிபரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்தார்.
அதுமட்டுமன்றி நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிய நீதிபதி ஏ.கே. ராஜனின் அறிக்கை பல மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டது.
தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, பஞ்சாப், பெங்காலி உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் நீதிபதி ஏ.கே. ராஜனின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.