சர்ச்சைக்குரிய செல்வந்தர் கௌதம் அதானியுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் தொடர்பு குறித்து தாம் கேள்வி எழுப்பியதால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ்
கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் பெயர் குறித்து அவதூறு ஏற்படும் வகையில் கருத்துரைத்திருந்ததாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அண்மையில் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி இழந்துள்ளார். இதற்கு பாஜகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று அவர் அடித்துக்கூறுகிறார்.
"நான் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். அதானி குறித்து நான் பேசியதைக் கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார்".
"ஆனால் நான் பின்வாங்கப்போவதில்லை. தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையிலான உறவு என்ன?" என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் தாம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
பாஜகவின் ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிட்டதாகவும் கருத்துச் சுதந்திரம் அறவே இல்லை என்றும் அவர் கூறினார்.

