புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த விவாதத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘16’ என்ற எண்ணைக் குறிப்பிட்டுப் பேசியது பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த 16ஆம் தேதி பிரதமர் மோடி ஆற்றிய உரையை தான் கவனித்ததாகவும், அப்போது தனது கைப்பேசியில் தேதியைப் பார்த்தபோது ஒரு விஷயம் புரிந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தக் கேள்விக்கான விடை 16 என்ற எண்ணில் உள்ளது. மத்திய அரசின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு ‘16’ என்ற எண்ணில்தான் ஒளிந்துள்ளது என அவர் ஒரு புதிரை முன்வைத்தார்.
இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் பட்சத்தில், இந்த 16 எம்.பி.க்களும் அரசுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்பதை அவர் சூசகமாக உணர்த்தியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அத்துடன், பாஜக பெரும்பான்மையை இழக்கத் தேவையான எண்ணிக்கையும் இதுவே எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “இது ஒரு புதிர், சரியான நேரத்தில் விடை கிடைக்கும்” என ராகுல் பதிலளித்தார்.
தென் மாநிலங்களின் உரிமைகளையும் கூட்டணி பலத்தையும் சுற்றியுள்ள இந்த ‘16’ எண் மர்மம், பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

