திருவனந்தபுரம்: கேரள மாநிலப் பேருந்து ஒன்றில் பயணித்தபோது எமனைச் சந்தித்ததாக ‘எக்ஸ்’ ஊடகத்தில் வெளியிட்ட பிரசாரக் காணொளி ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கூட்டணிமீது எமன் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். திரு ராகுலின் அப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஏப்ரல் 4ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி பல்வேறு கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வரிசையில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெயரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனக் காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ராகுல் இடம் பெற்றுள்ள விநோதக் காணொளி ஒன்றை அக்கட்சி வெளியிட்டது.
அந்தக் காணொளியில், கேரளத்தில் ராகுல் காந்தி பேருந்து ஒன்றில் பயணித்தபோது எமன் வேடமிட்ட ஒருவர் அவரைச் சந்திக்க வேண்டும் என்கிறார்.
ராகுலிடம் தன்னை எமன் எனக் கூறி அறிமுகப்படுத்திக்கொள்ளும் அவர், காங்கிரஸ் கட்சியின் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு அறிவிப்பால் தான் வேலை இழந்துவிட்டதாகவும் தனக்கு வேறு வேலைவாய்ப்புத் தர வேண்டும் என்றும் ராகுலிடம் கேட்கிறார். மேலும், காங்கிரஸ் கட்சியின் மருத்துவக் காப்பீடு தொடா்பான பதாகையையும் அவர் கையில் ஏந்தி மக்களிடம் அந்த வாக்குறுதியை விளக்கினார்.
ராகுல் அவருடன் பேருந்தில் சிறிது நேரம் அமர்ந்து உரையாடி விடைபெறுவதுடன் அந்தக் காணொளி நிறைவடைகிறது.

