அமெரிக்க வெளியுறவுத் துறை, அமெரிக்க புலனாய்வு செய்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் நிலைத்தன்மையைக் குலைக்கும் நோக்கில் சதித் திட்டம் தீட்டிவருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவான அதிகாரத்துவ உறவு இருந்துவரும் நிலையில் இந்தியாவை ஆளும் பாஜக கட்சியின் இந்தக் குற்றச்சாட்டு இருநாட்டு அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வேறுபாடுகளும் பிணக்குகளும் இருந்தபோதிலும் உறவுகளை வலுப்படுத்துவதில் இருநாடுகளும் உறுதியளித்திருந்த நிலையில் இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், ஊழல் அறிக்கை திட்டம் (OCCRP) எனும் கட்டுரையை மேற்கோள்காட்டி மோடி அரசாங்கத்தை ராகுல் காந்தி வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் சாடினார்.
ராகுலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் “மோடியும் அதானியும் ஒன்று” என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “அதானி குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார். ஏனெனில், அதானி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பிறகு தானும் விசாரணைக்கு உட்பட வேண்டியது இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்,” என விமர்சித்தார்.
அதானி குழுமத்தைப் பற்றியும் இந்திய அரசாங்கத்துடன் அந்நிறுவனத்திற்கு இருக்கும் உறவு பற்றியும் ஒருதலைபட்சமாக அக்கட்டுரையில் எழுதப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான உரிமையைப் பெறுவதற்காக நான்கு மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இக்குற்றச்சாட்டை அதானி மறுத்துள்ள நிலையில், அமெரிக்க செய்தி நிறுவனத்தின் அறிக்கையைப் பயன்படுத்தி நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் ராகுல் பேசி வருவதாக பாஜக கூறியுள்ளது.
மேலும், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட நபர்களுக்கும் ராகுலுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.