தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூரில் தொடரும் பதற்றம்; அதிரடிச் சோதனையில் சிக்கிய ஆயுதக்குவியல்

1 mins read
a1e01e28-5b7a-4f2d-b5a2-eefd33c2dfdc
உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு சென்று, அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். - படம்: ஏஎஃப்பி

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை, மோதல் சம்பவங்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஆயுதக் குவியல் சிக்கியுள்ளது.

நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள், தோட்டாக்கள், சக்தி வாய்ந்த வெடிபொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பெரிய சதிச்செயல் தடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினர் அங்குச் சென்று அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதே வேளையில், மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் நவீன ஆயுதங்கள் பெருங்குவியலாகக் கைப்பற்றப்பட்டன.

பல்வேறு வகை துப்பாக்கிகள், வெடிபொருள்கள், ஒரு கையெறிகுண்டு என மொத்தம் 328 ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இந்த வன்முறைச் சம்பவங்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தில் தற்போது அதிபர் ஆட்சி அமலில் உள்ளது. எனினும், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தபாடில்லை.

குறிப்புச் சொற்கள்