தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் கடத்தலில் தொடர்பா: பாகிஸ்தானின் கூற்றை வன்மையாக மறுக்கும் இந்தியா

2 mins read
1454cfb0-9336-4d98-97de-e5899d9e1398
தனது உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு மற்ற நாடுகள்மீது பழிபோடுவதைப் பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பாகிஸ்தானில் ரயில் கடத்தப்பட்ட சம்பவத்தில் இந்தியாவிற்குத் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது என்ற பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் கூற்றை இந்தியா வன்மையாக மறுத்துள்ளது.

“பாகிஸ்தானின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறோம். பயங்கரவாதத்தின் மையம் எது என்பது உலகிற்கே தெரியும். தனது உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும் தோல்விகளுக்கும் மற்ற நாடுகளே காரணம் எனப் பழிசுமத்துவதை விட்டுவிட்டு, தனது பிரச்சினைகளில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சாடியுள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) ஜாபர் விரைவு ரயிலை பலூச் விடுதலைப் படையினர் கடத்தி, அதிலிருந்த பயணிகளைப் பிணைபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ரயில் கடத்தலில் ஈடுபட்ட போராளிகள் ஆப்கானில் உள்ள குழுத் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஷஃப்கத் அலிகான் தெரிவித்திருந்தார்.

கடந்த காலத்தில் பலூச் விடுதலைப் படையினரின் எந்த ஒரு நடவடிக்கையையும் இந்தியாவுடன் தொடர்புபடுத்தி பாகிஸ்தான் பேசி வந்தது.

இம்முறை ஆப்கானை நோக்கிக் கைகாட்டியுள்ளதை அடுத்து, பாகிஸ்தானின் கொள்கை நிலைப்பாடு மாறியுள்ளதா என்று செய்தியாளர்கள் திரு ஷஃப்கத்திடம் கேட்டனர்.

அதற்கு, “எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. உண்மைகளும் மாறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா நிதியாதரவு அளித்து வருகிறது. இந்த ஒரு கடத்தல் நடவடிக்கையில், தொலைபேசி அழைப்புகளுக்கும் ஆப்கானுக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்,” என்று அவர் விளக்கினார்.

மேலும், இந்தியா தனது அண்டை நாடுகளைச் சீர்குலைக்க முயன்றுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ரயில் கடத்தலில் ஈடுபட்ட பலூச் விடுதலைப் படைப் போராளிகள் 33 பேரையும் கொன்றுவிட்டதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனால், அது தொடர்பாக எந்த ஒரு புகைப்படத்தையோ காணொளியையோ பாகிஸ்தான் ராணுவம் வெளியிடவில்லை.

இதனால், பாகிஸ்தான் ராணுவத்தின் தோல்வியை அதன் ஊடகப் பிரிவான ‘ஐஎஸ்பிஆர்’ மூடி மறைப்பதாக பலூச் விடுதலைப் படை தெரிவித்துள்ளது.

ரயிலைத் தங்கள்வசம் கொண்டுவந்ததும் அதனுள் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்களை பலூச் படையினரே விடுவித்துவிட்டனர் என்று குவெட்டாவை வந்தடைந்த பயணிகள் சிலர் ஊடகங்களிடம் தெரிவித்ததாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்